கோயம்பேடிலிருந்து ஆம்னி பஸ்களை சில வாரங்களுக்கு இயக்கலாமா? அரசிடம் விளக்கம் பெற உத்தரவு
கோயம்பேடிலிருந்து ஆம்னி பஸ்களை சில வாரங்களுக்கு இயக்கலாமா? அரசிடம் விளக்கம் பெற உத்தரவு
UPDATED : பிப் 01, 2024 08:17 AM
ADDED : பிப் 01, 2024 12:56 AM

சென்னை:'சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து தான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களை இயக்க வேண்டும்' என, கடந்த 24ம் தேதி, போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஆம்னி பஸ் நிறுவனமான, 'ஒய்.பி.எம்., டிராவல்ஸ்' தாக்கல் செய்த மனு:
கடந்த 2002ல் கோயம்பேடில் பஸ் நிலையம் கட்டப்பட்ட பின், அங்கிருந்து தான் அனைத்து ஆம்னி பஸ்களையும் இயக்க வேண்டும் என, போக்குவரத்து ஆணையர் மற்றும் மாநகர போலீஸ் ஆணையர் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்படி, சென்னைக்குள் ஆம்னி பஸ்கள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது, கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து தான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என்ற உத்தரவால், பயணியர் மட்டுமின்றி, பஸ் நிறுவனங்களுக்கும் அசவுகரியம்ஏற்பட்டுள்ளது.
சென்னை நகருக்குள் ஆம்னி பஸ்கள் நுழைய தடை விதிப்பது, 2003ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதாகும்.
எனவே, போக்குவரத்து துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணியரை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிமஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''இரண்டு நாட்களில் போக்குவரத்து ஆணையரின் உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்கஅனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, 'போக்குவரத்து ஆணையரின் உத்தரவை, சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கலாமே' என்றார் நீதிபதி.
அதற்கு, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''இது குறித்து அரசிடம் விளக்கம் பெற அவகாசம் வேண்டும்,'' என்றார். அதைத் தொடர்ந்து, விசாரணையை இன்றைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.