கொலை வழக்கில் தி.மு.க., நகர செயலர் கைது : துப்பாக்கி,தோட்டாக்கள் பறிமுதல்
கொலை வழக்கில் தி.மு.க., நகர செயலர் கைது : துப்பாக்கி,தோட்டாக்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2011 11:05 PM

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே, ரவுடி படுகொலை வழக்கில் தேடப்பட்ட, தி.மு.க., நகரச் செயலர் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஐந்துதோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரி பிச்சுமணி மகன் சசிக்குமார்,38. ரவுடி. இவருக்கும், ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் கீழநல்வலடிவிளை சுரேஷிற்கும்,37, முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த மார்ச் 1ல், தி.மு.க., துணைப்பொதுச் செயலர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், சுரேஷை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட சசிக்குமார், ஜாமினில் வெளிவந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை10 ல் நாலுமாவடியில் பஸ்சிற்காக காத்துநின்ற சசிக்குமாரை, காரில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து, தி.மு.க., செயலர் சுரேஷ் உள்ளிட்ட எட்டுபேர் மீது, குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் பீட்டர், ஜெபராஜ், குட்டி, சொர்ணபாண்டி ஆகிய நால்வர், ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த சுரேஷ் மற்றும் தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் டக்ளஸ்,24, ஆகியோர், நேற்று தென்திருப்பேரை அருகே கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள், 10 மொபைல் போன்கள், 40 ஆயிரம் ரூபாய், அரிவாள், கத்தி, 'ஸ்கார்பியோ' கார் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள், நீதிபதி உத்தரவுப்படி சிறையிலடைக்கப்பட்டனர். தலைமறைவாகவுள்ள கணேசன், மோகனை போலீசார் தேடிவருகின்றனர்.