ADDED : ஏப் 08, 2025 08:23 PM
திருச்சி:திருச்சியில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன், விமானத்தில் சென்னை செல்லவிருந்த அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் சாட்டை துரைமுருகனிடம் இருந்து, கீ செயினில் மாட்டப்பட்டிருந்த கத்தி பிடிபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதுாறு வழக்கில் ஆஜராக, நேற்று காலை விமானம் மூலம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சிக்கு வந்தார்.
நீதிமன்றத்தில் ஆஜரான பின், சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலர் சாட்டை துரைமுருகனும் சென்னை செல்வதற்காக, சீமானுடன் வந்தார். விமானம் ஏறுவதற்கு முன்பாக, இருவரையும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது, சாட்டை துரைமுருகன், தன்னுடைய பையில் வைத்திருந்த கத்தி இணைக்கப்பட்ட கீ செயினை, பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். விமானத்தில், கத்தி எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என பாதுகாப்புப் படையினர் சொல்ல, அதற்கு துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இறுதியில், கத்தியுடன் கூடிய கீ செயினை விமான நிலையத்துக்கு வெளியே நின்ற, நாம் தமிழர் கட்சியினரிடம் ஒப்படைத்து விட்டு, விமானம் ஏறி சென்னைக்கு சென்றார் துரைமுருகன்.

