ADDED : ஜன 15, 2024 02:34 AM

கொடைக்கானல், ஜன.15-
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பனியின் தாக்கத்திலிருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்க பனி போர்வை கொண்டு பூங்கா நிர்வாகம் பாதுகாக்கிறது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் எதிர்வரும் 61வது மலர் கண்காட்சிக்காக நவம்பர் இறுதியில் முதற்கட்டமாக 10 வகையான மலர் நாற்றுகள் மலர்படுகையில் நடவு செய்யப்பட்டன. தற்போது அவை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் பனியின் தாக்கத்திலிருந்து மலர் செடிகளை பாதுகாக்க பூங்கா நிர்வாகம் மாலையில் நிழல் வலையிலான பனிப் போர்வை கொண்டு மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பூங்கா நிர்வாகத்தினர் கூறுகையில், தற்போது பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலையில் பனியின் தாக்கமும் அதிகரித்து மறுநாள் காலை 10:00 மணி வரை நீடிக்கிறது. பனியிலிருந்து மலர் செடிகளை பாதுகாக்க நாள்தோறும் மாலையில் நிழல் வலையினாலான பனிப் போர்வை போர்த்தி மலர் நாற்றுகளை பாதுகாக்கிறோம் என்றனர்.