ADDED : ஜன 05, 2024 03:43 PM

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக ஜன.,30 மற்றும் 31ல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், 2019ல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவும், வீடியோ வெளியிடவும் தடை விதிக்கும்படி 1.10 கோடி ரூபாய் இழப்பீடும் கோரியிருந்தார் இபிஎஸ். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என இபிஎஸ் விடுத்த கோரிக்கையை ஏற்கவும் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜன.,5) விசாரணைக்கு வந்த போது, இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொங்கல் விடுமுறை, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு நேரில் ஆஜராக தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இபிஎஸ், மாஸ்டர் கோர்ட்டில் ஜன.,30, 31 தேதிகளில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.