மாஞ்சோலை மீது அக்கறை காட்டாதது ஏன்? முதல்வருக்கு கிருஷ்ணசாமி கேள்வி
மாஞ்சோலை மீது அக்கறை காட்டாதது ஏன்? முதல்வருக்கு கிருஷ்ணசாமி கேள்வி
ADDED : பிப் 04, 2025 07:03 PM
சென்னை:'மதுரை அரிட்டாபட்டிக்கு காட்டிய அக்கறையை, மாஞ்சோலைக்கு காட்டாதது ஏன்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
மாஞ்சோலை தேயிலை தோட்டப் பணிகள் நிறுத்தப்பட்டு, எட்டு மாதங்கள் கடந்து விட்டன. ஒருவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நிலத்தில் குடியிருந்து விட்டாலே, அவருக்கு அந்நிலத்தை சொந்தம் கொண்டாட, அனுபவிக்க சட்டப்படி உரிமை வந்து விடுகிறது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழும், மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஆலைக்கு எதிராக காட்டிய அக்கறையை, மாஞ்சோலை மக்களுக்கு காட்ட, முதல்வர் ஸ்டாலின் தவறியது ஏன். அவர்களில் பெரும்பாலானோர், ஏழை, எளிய பட்டியலினத்தவர்கள் என்பதாலா. இப்பிரச்னையை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், இப்போது மாஞ்சோலை வருகிறார்.
மாஞ்சோலை மலையக மக்கள் யாசகம் கேட்டு, யாரிடமும் கையேந்தவில்லை. நீதி கேட்டு ஐ.நா., மற்றும் சர்வதேச நீதிமன்றம் செல்வோம். மாஞ்சோலையிலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கி, அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்த, 'சாவிகளை' வழங்க முதல்வர் ஸ்டாலின் முன் வருவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. இதையும் மீறி வந்தால் மாஞ்சோலை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
மாஞ்சோலை மக்கள் ஆடு, மாடுகளை வளர்க்கவும், வீடுகள் கட்டவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், தலா இரண்டரை ஏக்கர் நிலத்தை, மாஞ்சோலையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.