ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு விவகாரம் 'கள்' நல்லுசாமி மீது குமரி அனந்தன் புகார்
ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு விவகாரம் 'கள்' நல்லுசாமி மீது குமரி அனந்தன் புகார்
ADDED : நவ 27, 2024 08:36 PM
'கள் போதை பொருள் அல்ல என்று வாதிட்டதில், ஓய்வு பெற்ற நீதிபதி அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக சொல்லி, ஏமாற்றிய நல்லுசாமி மீண்டும், 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்திருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., யிடம் குமரி அனந்தன் புகார் மனு வழங்கி உள்ளார்.
காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் சார்பில், டி.ஜி.பி.,யிடம் தமிழக காங்கிரஸ் செயலர் பாஸ்கர் அளித்துள்ள மனு:
தமிழகம் முழுதும் பட்டி தொட்டி எங்கும் குமரி அனந்தன் சென்று, கள்ளு போதை பொருள் என்றும், தீங்கு விளைவிக்கும் பொருள் என்றும், மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, 'கள்ளு போதைப் பொருள் இல்லை; உணவு பொருள். அதை போதைப் பொருள் என நிரூபித்தால், ஒரு லட்சம் ரூபாய் தரப்படும்' என, 2022ல் அறிக்கை வெளியிட்டார்.
அதற்கு குமரி அனந்தன், 'கள் போதை பொருள் என நான் நிரூபிக்கிறேன்' என்றார். அதன் அடிப்படையில், இந்த விவாதத்தை நல்லுசாமி ஏற்பாட்டில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடத்தப்பட்டது.
போதை பொருள் இல்லை என்று நல்லுசாமியும், அதில் போதை உள்ளது என்று குமரி அனந்தனும் விவாத மேடையில் வாதிட்டனர். இறுதியாக, 'கள்ளில் போதை பொருள் உள்ளது' என, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தீர்ப்பு வழங்கினார்.
அறிக்கையில் கூறியபடி, ஒரு லட்சம் ரூபாயை நல்லுசாமி தராமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து, டி.ஜி.பி.,யிடம் புகார் கொடுத்தோம். நீதிமன்றத்தை நாடுமாறு, அவர் கூறி விட்டார். பணம் இல்லாத காரணத்தால், வழக்கு தொடுக்கவில்லை.
சமீபத்தில், 'கள் போதை பொருள் என, நிரூபித்தால், 10 கோடி ரூபாய் பரிசு தருவேன்' என, நல்லுசாமி மீண்டும் அறிவித்துள்ளார். ஏற்கனவே, கள் போதை பொருள் என நிரூபித்து, ஓய்வு பெற்ற நீதிபதியே தீர்ப்பளித்த நிலையிலும், தவறான தகவல்களை வெளியிட்டு, அதுவும் போட்டி அறிவித்து பொய்யை நிலை நாட்டப் பார்க்கிறார் நல்லுசாமி. இது, மக்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். அதனால், நல்லுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற நீதிபதியின் தீர்ப்பு தப்பு என்றால், இப்போது நல்லுசாமியே வேறு ஒரு நீதிபதியை தேர்ந்தெடுத்து, அதற்குரிய நேரம், காலம், இடத்தை அறிவித்தால், குமரி அனந்தன் மீண்டும் வாதாட தயாராக இருக்கிறார்.
இதில், நல்லுசாமி அறிவித்த 10 கோடி ரூபாயை, அரசு வங்கியில் முன்கூட்டியே டிபாசிட் செய்ய வேண்டும். முதல்வரின் நிவாரண நிதிக்கு காசோலை எழுதி, நீதிபதியிடம் கொடுக்க வேண்டும். அதன்பின் தான் விவாதம் நடத்த வேண்டும். இதில் தவறும்பட்சத்தில், நல்லுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -