ADDED : பிப் 10, 2024 03:53 AM

மதுரை : ''குறவர் இனமக்கள் குறித்து பார்லிமென்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., தவறான தகவல்களை அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு குறவன் நலச்சங்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன், செயல் தலைவர் சுரேஷ் குமார் தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
பார்லிமென்டில் கடந்த வாரம் திருமாவளவன் பேசும்போது 'தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., பட்டியலில் உள்ள குறவன் சமூகத்தினர் ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளனர் எனவும், அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடையாத நிலையில் 'நொமாடிக் டிரைப்ஸ்' (நாடோடி பழங்குடி) ஆக உள்ளனர்' என்பது உள்ளிட்ட பல தகவல்களை தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது.
தமிழகத்தில் குறவன் சமூகத்தில் 40 லட்சம் பேர் உள்ளோம். எஸ்.சி., பட்டியல் வரிசையில் 36வதாக உள்ள எங்களுக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு கேட்டு தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
அரசு கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் உள்ளது. ஆனால் 'கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பாதிக்கும் வகையில் பழங்குடியின பட்டியலில் குறவன் சமூகத்தை சேர்க்க வேண்டும்' என தொடர்ந்து அவர் வலியுறுத்துகிறார்.எங்களுக்கு அரசியலில் எவ்வித பிரதிநிதித்துவம் கிடைத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ளார். குறவன் சமூகத்தை எம்.பி.எஸ்.சி., (மிகவும் பின்தங்கிய பட்டியல்) என தனியாக பிரிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்நிலையில் எங்கள் சமூகத்தை அரசியலில் வளர விடாமல் தடுக்கும் நடவடிக்கையாக இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.