ADDED : ஜன 16, 2025 09:53 PM
சென்னை:நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் போது, கட்டுமான தொழிலாளர் நல நிதி வசூலிப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயமாக்கி உள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால், கட்டுமான திட்டங்கள் அதிகரித்துஉள்ளன.
இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், திட்டத்தின் மொத்த மதிப்பில், 1 சதவீத தொகையை, கட்டுமான தொழிலாளர் நல நிதியாக வழங்க வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, இந்த நிதி வாயிலாக, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துக்கு, ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் கிடைக்கிறது.
பெரும்பாலான இடங்களில், கட்டுமான திட்டங்களின் உண்மையான மதிப்பீடுகள் அடிப்படையில், இந்த நிதி கணக்கிடப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள், இதில் அலட்சியமாக செயல்படுகின்றன. இதனால், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துக்கு, வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம், மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதுகுறித்து, நம் நாளிதழில், டிச., 27ல் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கட்டுமான தொழிலாளர் நல நிதி வசூலிப்பது தொடர்பாக சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உள்ளாட்சிகளில் எவ்வித விடுதலுமின்றி, அனைத்து கட்டட அனுமதியிலும், கட்டுமான தொழிலாளர் நல நிதியை வசூலிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கட்டுமான திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, கட்டட பணி மதிப்பு குறித்த வரைவு அறிக்கை பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மதிப்பில், 1 சதவீத தொகையை செலுத்தினால் மட்டுமே, விண்ணப்பம் தொடர்பான அடுத்தகட்ட பரிசீலனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சாதாரண கட்டுமான திட்டம் என்றாலும், அதில் அலட்சியம் காட்டாமல், கட்டுமான தொழிலாளர் நல நிதி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.