ADDED : ஜன 03, 2025 07:37 PM

ஊட்டி: நீலகிரி அருகே கரடி தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். கரடியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சதீஷ் ( எ ) ரங்கசாமி 38, இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தை உள்ளனர். இவர் அதே பகுதியில் தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை தேயிலை தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த இவர், இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சதீஷ் திரும்பி வரவில்லை. அதிர்ச்சியடைந்த உடன் பணியாற்றியவர்கள் அவரை வனப்பகுதிக்குள் சென்று தேடினர்.
அப்போது, வனவிலங்கு தாக்கி சதீஷ் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. உடனே அளிக்கப்பட்ட தகவலின் பேரில், மஞ்சூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சதீசை தாக்கியது சிறுத்தையா? கரடியா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே இந்த பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் கால்நடைகளை வேட்டையாடி சென்றுள்ளது. இப்போது மனித வேட்டையை தொடங்கிவிட்டது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இவரை தாக்கிய, வனவிலங்கை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்', என்றனர்.
இந்நிலையில் மஞ்சூர் சிவசக்தி நகர் பகுதியில் சிறுத்தைகள் சாலையோரம் விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.