நில வகைப்பாடு தகவல் தொகுப்பு மாநில திட்டக்குழு உருவாக்கம்
நில வகைப்பாடு தகவல் தொகுப்பு மாநில திட்டக்குழு உருவாக்கம்
ADDED : ஜன 30, 2026 06:51 AM
சென்னை: தமிழகத்தில், அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், 'டிஜிட்டல்' வடிவில் நில உபயோக தகவல் தொகுப்பு உருவாக்கும் பணிகளை, மாநில திட்டக் குழு துவக்கி உள்ளது.
தமிழகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, வேளாண் துறை உட்பட, பல்வேறு துறைகள், நில வகைப்பாடு குறித்த விபரங்களை தொகுக்கின்றன.
குறிப்பாக, நிலங்களை குடியிருப்பு, வணிக பகுதி, தொழில் பகுதி, பொழுதுபோக்கு பகுதி என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிரிக்கிறது. அதே நிலத்தை, மண் வளம் அடிப்படையில், வேளாண் துறை வகைப்படுத்துகிறது.
தொழில் துறையில், எந்தெந்த நிலத்தில் எத்தகைய தொழில் நிறுவனங்கள் அமைக்கலாம் என்று, வகைப்படுத்துகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு துறையும் தங்களுக்கு ஏற்ற வகையில், நில வகைப்பாட்டு விபரங்களை தொகுக்கின்றன.
ஒரு துறையின் தகவல் தொகுப்பை, பிற துறைகள் பயன்படுத்துவதில்லை. அதனால், நிலங்களின் மதிப்பு, பயன்பாடு அடிப்படையில் வகைப்பாடு பிரிக்கும் வழிமுறையை, மாநில திட்டக் குழு புதிதாக உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து, திட்டக்குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனைத்து அரசு துறைகளும் தங்களது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில், நில வகைப்பாட்டு விபரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. நிலத்தை அடிப்படை மூலதனமாக வைத்து, அதற்கான மதிப்பு, வகைப்பாடு வரையறுக்கப்பட்டு உள்ளது.
ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியிட அமைப்பு தகவல் தொகுப்பு, செயற்கை நுண்ணறிவு திறன் அடிப்படையில், துல்லியமாக தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், இத்தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில், இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

