நில மோசடி புகார் உண்மையில்லை மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி விளக்கம்
நில மோசடி புகார் உண்மையில்லை மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி விளக்கம்
ADDED : ஆக 07, 2011 01:41 AM
சென்னை : ''என் மீது கொடுக்கப்பட்டுள்ள, நில மோசடிப் புகார் உண்மைக்குப் புறம்பானது; உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டது'' என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தன் மீதான நில மோசடிப் புகாருக்கு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமகிருஷ்ணன் அளித்துள்ள விளக்கம்: சென்னையில் வசிக்கும் ஜெயக்குமார், செங்கப்பட்டு தாலுகா, வல்லம் என்ற ஊரில் வசிக்கும் இளம்பருதி என்பவரை, பவர் ஏஜன்டாக நியமித்து, அவர் செங்கல்பட்டு மாவட்ட முனிசிப் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது, விசாரணையில் உள்ளது.
செங்கல்பட்டு வட்டம், காலவாக்கம் கிராமத்தில், 60 சென்ட் நிலத்தை, முரளி செட்டியார், ராஜ்குமார் மற்றும் அப்பகுதியில் வாழும், ஏழு இதர நபர்களுக்கும் துண்டு, துண்டாக விற்று விட்டார். அவ்வாறு விற்கும்போது, 1990ம் ஆண்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் (டிக்), 15.75 லட்ச ரூபாய் கடன் பெற்றதையும், சிறிதளவு பணம் கட்டி, மீதக் கடன், வட்டி பாக்கி இருப்பதையும், மறைத்து விட்டார்.
கடந்த, 2006 பிப்., மாதம் மேற்சொன்ன சொத்து, கடன் கொடுத்த நிறுவனத்தால், ஏலம் விடப்பட்டுள்ள விவரம், நிலம் வாங்கியவருக்குத் தெரிந்தவுடன், முரளி செட்டியாரை அணுகினார். அவர், உண்மையை ஒத்துக் கொண்டு, சொத்துப் பத்திரங்களை, 'டிக்' நிறுவனத்திடமிருந்து, சட்டப்படி மீட்க முயற்சி செய்தார். 'டிக்' நிறுவனம், ஏலம் விட்டது உண்மை என்றும், மேற்படி ஏலம் உறுதி செய்யப்படும் முன், பாக்கித் தொகையை வட்டியுடன் செலுத்தும் பட்சத்தில், கடன் வாங்கியவருக்கே பத்திரங்கள் திரும்பத் தரப்படும் என்ற ஷரத்து, ஏல நிபந்தனைகளுள் ஒன்று என்றும் தெரிவித்தனர். அதன்படி, முரளி செட்டியார் அத்தாட்சிக் கடிதத்தின்பேரில், பணம் செலுத்தப்பட்டு, பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதில், எந்தவித சட்ட வீதி மீறலோ, முறைகேடோ இல்லை என்று, 'டிக்' நிறுவனத்தார் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த உண்மைகளை மறைத்து, என்னைப் பற்றித் தவறான தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில், செய்தி வெளியாகியுள்ளது. புகார் உண்மைக்குப் புறம்பானது. இவ்வாறு, ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.