ADDED : ஆக 26, 2011 01:23 AM

அன்னூர்: பல கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை, போலி ஆவணம் மூலம் மோசடி செய்து விற்றதாக, கோவை மாநகர தி.மு.க., செயலர் வீரகோபால் உள்ளிட்ட மூவர், கைது செய்யப்பட்டனர்.
கோவை, வடவள்ளி, சக்தி நகரைச் சேர்ந்த பெரியசாமி கவுண்டர் மகள் ரத்தினம், மகன் சாந்தலிங்கம், 65. பெரியசாமி கவுண்டரின் சகோதரர் முருகையனின் மகன் ராமலிங்கம், 55; தி.மு.க., இளைஞரணி முன்னாள் ஒன்றிய அமைப்பாளர். ரத்தினம், சாந்தலிங்கம் மற்றும் ராமலிங்கத்திற்கு சொந்தமாக, விளாங்குறிச்சியில், இரண்டு ஏக்கர், ஆறு சென்ட் நிலம் இருந்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்நிலத்தின் ஒருபகுதியை சாந்தலிங்கம், தன் சகோதரி ரத்தினத்துக்கு தெரியாமல், தி.மு.க., கோவை மாநகர செயலர் வீரகோபாலுடன் சேர்ந்து, 'லே-அவுட்' போட்டு, சைட்டுகளாக விற்றார். மீதமுள்ள நிலத்தை சாந்தலிங்கமும், ராமலிங்கமும், ரத்தினத்திற்கு தெரியாமல், பல கோடி ரூபாய்க்கு விற்றனர். இதுகுறித்து ரத்தினம், தி.மு.க., மாநகர செயலர் மற்றும் சகோதரர்களிடம் கேட்டதற்கு, 'இப்பிரச்னையை இத்துடன் விட்டு விட வேண்டும்; இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன்' என மிரட்டினர். கோவை எஸ்.பி., அலுவலகத்தில், ரத்தினம் புகார் செய்ததையடுத்து, கோவில்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி., உத்தரவிட்டார். கோவில்பாளையம் போலீசார், விசாரித்து, ரத்தினத்திற்கு சொந்தமான நிலத்தை சதி செய்து, போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவில், வீரகோபால் மற்றும் சாந்தலிங்கம் மீது, வழக்கு பதிவு செய்தனர். நில அபகரிப்பு பிரிவு மற்றும் கோவில்பாளையம் போலீசார், நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு ஆவாரம்பாளையத்தில் உள்ள வீரகோபால் வீட்டுக்கு சென்றனர். கதவை தட்டி, 'உங்கள் கம்பெனியில் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே வாருங்கள்' என அழைத்தனர். வெளியே வந்த வீரகோபாலை, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர். ரத்தினத்திற்கு சொந்தமான மற்றொரு பகுதி நிலத்தை, மோசடி செய்து விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ரத்தினத்தின் பெரியப்பா மகனும், தி.மு.க., பிரமுகருமான, ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கத்தையும், சாந்தலிங்கத்தையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.