ADDED : நவ 21, 2024 10:48 PM
சபரிமலையில் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்துக்கான பொருட்கள் மற்றும் உணவு, பிரசாதம் தயாரிப்புக்கான பொருட்கள் கழுதையில் எடுத்து வரப்பட்டன. பின், டிராக்டருக்கு மாற்றப்பட்டது. டிராக்டர்கள் வந்து செல்லும் வேகம் பக்தர்களுக்கு உயிர் அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதையடுத்து, சபரிமலையில் ரோப்வே திட்டத்திற்கு, 17 ஆண்டுகளுக்கு முன் வடிவம் கொடுக்கப்பட்டது. ஆனால், வனத்துறையின் தொடர் எதிர்ப்பால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, இந்த திட்டம் நனவாகும் நிலைக்கு வந்துள்ளது.
பம்பை ஹில்டாப் முதல் சன்னிதானம் வரை, 2.7 கி.மீ.,யில் 250 கோடி ரூபாய் செலவில் ரோப்வே அமைகிறது. அதன்பின், சன்னிதானத்தில் இருந்து, 10 நிமிடத்தில், பம்பைக்கு செல்ல முடியும். மாளிகைபுரத்தின் பின்புறம் அன்னதான மண்டபத்துக்கு அருகே பயன்பாடற்ற நிலையில் உள்ள கட்டடங்களை உடைத்து, ரோப்வே ஸ்டேஷன் அமைகிறது.
ரோப்வே அமைவதற்காக வனத்துறை வழங்கும் நிலத்துக்கு பதிலாக, கொல்லம் மாவட்டம் செந்துாரணி வனவிலங்கு சரணாலயத்தின் அருகே கட்டில பாறையில் வருவாய்த் துறைக்கு சொந்தமான, 9 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் திருவனந்தபுரத்தில் கையெழுத்தானது. தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த், அதிகாரிகள் பங்கேற்றனர்.