கொச்சி - தனுஷ்கோடி சாலையில் தொடரும் மண்சரிவால் அபாயம்
கொச்சி - தனுஷ்கோடி சாலையில் தொடரும் மண்சரிவால் அபாயம்
UPDATED : அக் 29, 2025 05:54 AM
ADDED : அக் 29, 2025 05:51 AM

மூணாறு: கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு தொடர்வதால் மூணாறு துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையில் மூணாறு, கொச்சி இடையே, 126 கி.மீ., தூரம், 1,250 கோடி ரூபாய் செலவில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
அடிமாலி அருகே கூம்பன்பாறை லட்சம் வீடு காலனி பகுதியில் அக்., 25 இரவில் ஏற்பட்ட மண் சரிவில், அப்பகுதியை சேர்ந்த பிஜூ இறந்தார். அவரது மனைவி சந்தியா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அங்கு மீண்டும் மண்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் லட்சம் வீடு காலனியில் வசித்த, 44 குடும்பங்கள் நிவாரண முகாம் உள்பட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட் நியமித்த சிறப்பு குழு ஆய்வு நடத்தினர்.
அதில் கட்டுமான பணிகளில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக தெரியவந்தது. அதன் முதல்கட்ட அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் விரிவான அறிக்கை நான்கு நாட்களுக்குள் கலெக்டரிடம் தாக்கல் செய்யப்படும் என சிறப்பு குழுவினர் தெரிவித்தனர். லட்சம் வீடு காலனி பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் நூறு அடி தூரம் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையில் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மண்சரிவு ஏற்பட்டது. வாகனங்கள் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றன. இது போன்று பல பகுதிகளில் மண்சரிவுக்கு வாய்ப்புள்ளதால், மூணாறு துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விதிமுறை மீறி நடந்த பணிகள் மூலம் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்ததால், நிபுணர் குழு விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி அலெக்சாண்டர்தாமஸ் உத்தரவிட்டார். அதற்கான குழுவை கலெக்டர் அமைக்க வேண்டும்.
பேரிடர் மேலாண்மை துறையில் பொறுப்பு வகிக்கும் துணை கலெக்டர், பொதுப்பணி துறை நிர்வாக பொறியாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட இயக்குனர் ஆகியோர் தொடுபுழாவில் டிசம்பரில் விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவில் கூறியுள்ளார்.

