'10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் ஏமாற்று வேலை'
'10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் ஏமாற்று வேலை'
ADDED : டிச 04, 2025 05:32 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
கடந்த ஆண்டு, தமிழக பட்ஜெட்டில், 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் டாப்' வழங்கப்படும் எனக் கூறி, 2,000 கோடி ரூபாயை ஒதுக்கிய தி.மு.க., அரசு, தற்போது, 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்வது, அப்பட்டமான ஏமாற்று வேலை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக, 2011 முதல் நடைமுறையில் இருந்த இலவச 'லேப் டாப்' திட்டத்தை, ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க., அரசு ஒழித்துக்கட்டியது.
இப்போது, தேர்தல் நெருங்கும் சமயத்தில், மீண்டும் அத்திட்டத்தை துாசி தட்டி எடுத்தால், முதல் தலைமுறையினர் மயங்கி, தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டு விடுவரா? ஆட்சி முடிய இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில், இத்திட்டத்தை இப்போதே அமல்படுத்த துடிப்பது ஏன்?
அரசு கல்லுாரிகளில், குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் மாணவர்கள், தி.மு.க., அரசின் துரோகத்தை எப்படி மன்னிப்பர்?
ஓராண்டு ஆட்சியை வைத்துக் கொண்டு, இரு ஆண்டுகளில், 20 லட்சம் மாணவ - மாணவியருக்கு 'லேப் டாப்' என, பட்ஜெட் ஒதுக்கியது ஏன்? தி.மு.க., கொள்ளை அடிப்பதற்கு, மாணவர்களின் ஆசைகளும், கனவுகளும் பலியாக வேண்டுமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

