சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
UPDATED : ஜன 31, 2025 11:48 AM
ADDED : ஜன 31, 2025 11:43 AM

சென்னை: 'சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது. இதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் எல்லாம் முதலீடுகள் செய்கின்றன' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தி.ரு.வி.க., நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு சென்னைக்கு பல்வேறு பணிகளை செய்து இருக்கிறோம். வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தி உள்ளேன்.
ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராக தான் கவர்னர் செயல்படுகிறார். அது எங்களுக்கு நன்றாக தான் இருக்கிறது. இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். கவர்னரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும்.
ஈ.வெ.ராவை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க விரும்பவில்லை.
வேண்டும் என்றே திட்டமிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை இருப்பதாக பெரிதுபடுத்துகிறார்கள். இதனை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களை பொறுத்தவரைக்கும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் இருக்கிறது. அதனால் தான் வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் எல்லாம் முதலீடுகள் செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.