ADDED : செப் 22, 2024 07:44 AM
மேட்டுப்பாளையம் : கல்லூரி மாணவிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக, 40 வயது வக்கீலை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த, 19 வயது கல்லூரி மாணவி, கோவை தனியார் கல்லூரியில், இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தினமும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 8:20க்கு பாசஞ்சர் ரயிலில் சென்று, மாலை 5:55 மணிக்கு ரயிலில் திரும்புகிறார். இந்த மாணவியை, அதே ரயிலில் பயணம் செய்யும், மேட்டுப்பாளையம் மணி நகரைச் சேர்ந்த வக்கீல் அப்துல் ரசாக், 40 கடந்த ஆறு மாதங்களாக பின் தொடர்ந்து செல்வதும், மாணவி மீது உரசுவதுமாக இருந்து வந்துள்ளார்.
மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல், மனக்கவலை அடைந்துள்ளார்.
மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசில், புகார் செய்துள்ளார்.
மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வழக்கு பதிவு செய்து, அப்துல் ரசாக்கை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.