மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்ய வக்கீல்கள் எதிர்ப்பு
மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்ய வக்கீல்கள் எதிர்ப்பு
ADDED : டிச 17, 2025 06:27 AM

சென்னை: போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும், மின்னணு எனப்படும் 'ஆன்லைன்' வாயிலாக வழக்கு தாக்கல் செய்யும் 'இ- - பைலிங்' முறையை நிறுத்தி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், கீழமை நீதிமன்றங்களில் டிச., 1 முதல் இ- - பைலிங் முறையில் மட்டுமே வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இ- - பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்வதில், பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக கூறி, மாநிலம் முழுதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், 'லா அசோசியேஷன்' தலைவர் செல்வராஜ், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் என, அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் சார்பில், நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆவின் நுழைவு வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் கூறுகையில், ''போதிய உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல், இ- - பைலிங் முறையை அமல்படுத்தக் கூடாது,'' என்றார்.
இ- - பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றம் முன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், மழையிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

