வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம்: குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம்: குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 08, 2025 02:02 AM

மதுரை:
தமிழகத்தில் வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் உருவாக்க தாக்கலான வழக்கில் விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க (ஏ.பி.வி.எஸ்.,) செயற்குழு உறுப்பினர் சுசிகுமார் தாக்கல் செய்த பொது நல மனு:
தமிழகத்தில் 2010 முதல் 2025 வரை 13 வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சில வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது சட்ட அமைப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
கர்நாடகா, ராஜஸ்தானில் வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் உள்ளது. ஒருவர் வழக்கறிஞருக்கு எதிராக குற்றத்தில் ஈடுபட்டால் அச்சட்டப்படி சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் உருவாக்க தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுபாஷ்பாபு, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் வழக்கறிஞர் லட்சுமண் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இதில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் விருப்பமுள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் இடம் பெற வேண்டும். இக்குழு விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கி அரசுக்கு பரிந்துரைப்பதற்காக நவ.,18 முதல் நவ.,20 க்குள் ஆன்லைன் மூலம் கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும். இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ., 26 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

