நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 17, 2025 06:26 AM

சென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை, பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீசை திரும்ப பெறக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ஜ., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க தீர்மானம் கோரி, லோக்சபா சபாநாயகரிடம், 'இண்டி' கூட்டணி கட்சி சார்பில், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் குமரகுரு தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் பேசியவர்கள், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை அமல் படுத்தாமல், நீதிமன்றம் மற்றும் நீதித்துறையின் மாண்பை சிதைக்கும் வகையில், அரசியலை நுழைப்பதாக குற்றம் சாட்டினர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான, பதவி நீக்க தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், மாநிலம் முழுதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என, பா.ஜ., மாநில வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் குமரகுரு, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

