ADDED : பிப் 13, 2024 04:27 AM

ஊசிப்போன உணவு பண்டம்!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:
இந்த ஆண்டு கவர்னர் உரை, கொள்கை விளக்க உரையாக இல்லை. இந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. புதிய மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்காத அரசு, பசப்பு வார்த்தை ஜாலங்களை வாரி இரைத்துள்ளது. தி.மு.க., அரசு தயாரித்துள்ள கவர்னர் உரை, உப்பு சப்பில்லாதது; ஊசிப்போன உணவுப் பண்டம்.
கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின், கவர்னர் உரை துவங்குவதற்கு முன்பாக, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார். அதை சபாநாயகர் நிறைவேற்றாததால், உரையை படிக்கவில்லை என்கிறார். இது, கவர்னருக்கும், சபாநாயகருக்கும் இடையில் உள்ள பிரச்னை. மோதல் போக்கு குறித்து, அரசையும், கவர்னரையும் தான் கேட்க வேண்டும்.
சபாநாயகர் பல மரபுகளை கடைபிடிக்கவில்லை. சபாநாயகர் அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையோடு செயல்பட வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்த போது, கவர்னருடன் எந்த பிரச்னையும் இல்லை.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைக்க, சரியாக திட்டம் போடப்பட்டது. தி.மு.க., அரசு முழுமையாக நிறைவேற்றி திறந்திருந்தால் பிரச்னை வந்திருக்காது. எதற்காக அவசரமாக திறந்தனர் என்பது தெரியவில்லை. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக, அவசரமாக திறக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அக்கறை இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
சட்டசபையில் கவர்னரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில், தமிழகத்திற்கு பயனளிக்கும் எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழக அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதற்கான, எந்த அறிகுறியும் கவர்னர் உரையில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று, கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. சமூக நீதியை காப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையும் இல்லை; தெளிவும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
அரசு காலி பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி எதுவும் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கவர்னர் மீது ஏன் கோபம்?
போலியான தகவல்கள் மற்றும் போலியான தரவுகளுடன் தயாரிக்கப்பட்ட உரையை படிக்காதததற்காக, கவர்னர் மீது தி.மு.க., ஏன் கோபமாக இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது, கவர்னர் உரைகள் மீது பேசிய பேச்சுக்களை, நாம் தொடர்ந்து நினைவுபடுத்த வேண்டுமா?
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.