அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா, இல்லையா என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகிறது. தமிழகம் குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாற்றப்பட்டுள்ளது. இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: மாநில அரசின் முழுமுதல் பணியான சட்டம் - ஒழுங்கை காக்க இயலாத தி.மு.க., அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியதாக இருக்கிறது.எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும் கைது செய்ய மட்டுமே போலீஸ் துறையை பயன்படுத்தாமல், அவர்கள் பணியை சுதந்திரமாக செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக மக்களால் நிம்மதியாக வெளியில் தான் நடமாட முடியவில்லை என்றால், நிம்மதியாக வீட்டில் கூட உறங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.
ஆனால், மக்களின் துயரங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், தமிழக மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: கடந்த மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில், போலீஸ் துறை சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக, தமிழகம் வன்முறை களமாக மாறிக் கொண்டிருக்கிறது. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தங்களுடைய உயிர்கள் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இனிமேலாவது, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
த.மா.கா., தலைவர் வாசன்: முதியோர்களுக்கு மிகுந்த அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு, சட்டம் - ஒழுங்கில் அரசு கவனம் செலுத்தாததே காரணம். இதற்கெல்லாம் அடித்தளம் போதைப்பொருள் கலாசாரம் தான்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: உலக அளவில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக, தமிழக போலீஸ் துறை செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமையாக பேசினார். இந்த கொலை சம்பவம், தமிழக போலீஸ் துறை முற்றிலும் செயலிழந்து, ஏவல் துறையாக மட்டுமே செயல்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.