UPDATED : ஜன 27, 2025 05:39 AM
ADDED : ஜன 27, 2025 05:36 AM

சென்னை: தமிழகத்தில் இருந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
கவர்னர் ரவி: பல்வேறு துறைகளில் வழங்கி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், பத்ம விருது அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதை பெற்றவர்களுக்கு பாராட்டுகள்.
உங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சிறப்புகள் நிறைந்த, அசாதாரண பயணங்கள், எண்ணற்ற மக்களை, குறிப்பாக இளைஞர்களை, தேசத்தை கட்டி எழுப்புவதை நோக்கி ஊக்கப்படுத்துகின்றன.
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: தமிழகத்தில் இருந்து, இந்திய அரசின் உயரிய குடிமக்கள் விருதுகளான, பத்ம பூஷண் விருது பெறத் தேர்வாகி உள்ள, தொழில் வர்த்தகர் நல்லிகுப்புசாமி செட்டியார், நடிகர் அஜித், நடிகை ேஷாபனா; பத்ம ஸ்ரீ விருது பெறத் தேர்வாகி உள்ள, மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, சமையல் கலைஞர் தாமு என்கிற தாமோதரன்.
'தினமலர்' நாளிதழை சேர்ந்த லட்சுமிபதி ராமசுப்பையர், பேராசிரியர் ஸ்ரீனிவாஸ், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தம், தொழில் வர்த்தகர் சந்திரமோகன், ஸ்தபதி ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, எழுத்தாளர் சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகியோருக்கு, இதயங்கனிந்த வாழ்த்துகள்.
தங்கள் துறைகளில் மேற்கொண்ட, பல்வேறு சாதனைகளுக்கு மணிமகுடமான இவ்விருது, இன்னும் பல சாதனைகளைப் புரிந்து, நம் மாநிலத்திற்கும், நாட்டிற்கும், மேலும் புகழ் சேர்ப்பதற்கான ஊக்கமாக அமையட்டும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தை சேர்ந்த தொழில் வர்த்தகர் நல்லி குப்புசாமி செட்டியார், திரைப்பட நடிகர் அஜித், நடிகை ேஷாபனா ஆகியோர் பத்மபூஷண் விருது வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலை வல்லுனர் தாமோதரன், 'தினமலர்' குழுமத்தை சேர்ந்த லட்சுமிபதி, பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன், ஹட்சன் குழுமத் தலைவர் சந்திரமோகன், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்ப சம்பந்தன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி,
குருவாயூர் துரை, புதுவையை சேர்ந்த தவில் வித்வான் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
விருது பெற்ற அனைவரும், தங்களின் துறைகளில், மேலும் சாதனை படைக்கவும், இன்னும் உயரிய விருதுகளை வெல்லவும் வாழ்த்துகள்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.