அறைக்குள் 'மீட்டிங்' நடத்தும் தலைவர்கள் தமிழக பா.ஜ.,வில் பலத்த குமுறல்
அறைக்குள் 'மீட்டிங்' நடத்தும் தலைவர்கள் தமிழக பா.ஜ.,வில் பலத்த குமுறல்
ADDED : ஜன 03, 2024 01:24 AM
சென்னை:தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாக செயல்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் தலா ஒரு மாவட்ட தலைவரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகிறது.
ஆனால், மாவட்டத் தலைவர்கள் மக்களை சந்தித்து களப் பணியாற்றாமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., - அ.தி.மு.க.,வினரை போல், பா.ஜ., மாவட்ட தலைவர்களும், எந்நேரமும் கட்சி பணிகளில் ஈடுபட்டால் தான் தமிழகத்தில் பா.ஜ., வளரும். அண்ணாமலை மாநில தலைவராக வந்த பின், மக்களிடம் பா.ஜ.,வுக்கான எழுச்சி காணப்படுகிறது.
ஆனால், மாவட்ட தலைவர்கள் மக்களை சந்திப்பது போன்ற களப்பணிகளில் ஈடுபடாமல் இருப்பதால், அந்த எழுச்சியை தக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட தலைவர்கள், கட்சி மேலிடம் தெரிவிக்கும் பிரதமர் மோடி பேசும், 'மனதின் குரல்' நிகழ்ச்சி கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
தங்களுக்கு வேண்டிய நிர்வாகிகளை வரவழைத்து, அறைக்குள் ஆலோசனை, 'பூத்' கமிட்டி கூட்டம் என, பல கூட்டங்களை ஒரே இடத்தில் நடத்துகின்றனர். அதுவே, போதுமான அளவுக்கான கட்சி பணி என நினைத்து, களப் பணியாற்றாமல் இருந்து விடுகின்றனர்.
வார்டு வாரியாக சென்று கிளை தலைவர்கள், மண்டல் தலைவர்கள் உடன் இணைந்து அங்குள்ள மக்களிடம் என்ன பிரச்னை என்று கேட்டு, அதற்காக குரல் கொடுப்பதில்லை.
கட்சியில் புதிதாக சேரும் நபர்களிடம், போஸ்டர் அச்சடித்து தருமாறும், பேனர் வைக்குமாறும் கேட்டு, தொடர்ந்து செலவு செய்ய வற்புறுத்துகின்றனர். இதனால் ஆர்வமுடன், கட்சியில் சேருவோர், சில தினங்களிலேயே பா.ஜ.,வில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கட்சி பெயரை பயன்படுத்தி தொழில் செய்வோர்களிடம், தொடர் 'வசூலிலும்' ஈடுபடுகின்றனர்.
மாவட்ட தலைவர்கள், மாநில மைய குழு முக்கிய நிர்வாகிகள் பரிந்துரைப்படி நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், அவர்கள் சரிவர கட்சி பணியாற்றவில்லை என்றாலும், கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலையால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ளன.
எனவே, சரிவர கட்சி பணிகளில் ஈடுபடாத மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு, சிறப்பாக செயல்படும் நபரை நியமித்தால் தான் கட்சி வளர்வதுடன், தேர்தலிலும் வெற்றிபெற முடியும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.