இந்தியா - சீனா உறவின் 75வது ஆண்டு விழா இருதரப்பு உறவை பலப்படுத்த தலைவர்கள் உறுதி
இந்தியா - சீனா உறவின் 75வது ஆண்டு விழா இருதரப்பு உறவை பலப்படுத்த தலைவர்கள் உறுதி
UPDATED : ஏப் 02, 2025 01:02 AM
ADDED : ஏப் 02, 2025 01:00 AM

புதுடில்லி, இந்தியா - சீனா இடையேயான துாதரக உறவின், 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'இரு நாடுகளின் உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சீன அதிபர் ஷீ ஜின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பிஉள்ளார். அதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதில் வாழ்த்து அனுப்பியுள்ளார்.
நம் அண்டை நாடான சீனா, 2020ல் கிழக்கு லடாக்கில் அத்துமீறி நுழைய முயன்றதால், இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல சுற்று பேச்சுகளுக்குப் பின், எல்லையில் இருந்து இரு படைகளும் விலக்கிக் கொள்ள கடந்தாண்டு முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஷீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு இறுதியில் சந்தித்தனர். அப்போது இரு தரப்பு உறவுகளை புதுப்பிப்பதற்கு, மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச் செல்ல இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரு நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் நிலையில் பல சுற்று பேச்சுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இரு நாட்டுக்கும் இடையேயான துாதரக உறவு ஏற்பட்டு நேற்றுடன், 75 ஆண்டு ஆகிறது.
இதையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் நேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார். அதற்கு பதில் வாழ்த்து செய்தியை, திரவுபதி முர்மு அனுப்பியுள்ளார்.
இதுபோல, பிரதமர் நரேந்திர மோடி, சீன பிரதமர் லீ கியாங்கும் பரஸ்பரம் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
தன் வாழ்த்து செய்தியில் ஜின்பிங் கூறியுள்ளதாவது:
இரு நாடுகளும் பழையமான நாகரிகங்களைக் கொண்டதாக, மிகப் பெரும் வளர்ந்து வரும் நாடுகளாக, 'குளோபல் சவுத்' எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய அங்கமாக, நவீனமயமாக்கும் முயற்சிகளில் முக்கிய கட்டத்தில் பரஸ்பரம் ஈடுபட்டுள்ளன.
இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, பரஸ்பரம் இரு நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக உள்ளது.
இரு நாட்டின் அடையாளங்களாக கருதப்படும், டிராகன் மற்றும் யானை இணைந்து நடனமாடுவது என்பது, பரஸ்பரம் இரு நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களை மதிப்பதாக அமைகிறது.
பல துறைகளில் இணைந்து செயல்படுவது, எதிர்கால தேவைகளை நிறைவேற்றும் வகையில், இரு தரப்பு உறவை இரு தரப்பும் கையாள வேண்டும். பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, மதிப்பு, நலன், பலன்களுக்கும், பொதுவான வளர்ச்சி ஆகியவை வாயிலாக, சர்வதேச உறவில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்துவோம்.
எல்லையில் பாதுகாப்பு மற்றும் அமைதி, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது, தகவல் பரிமாற்றத்தை ஆழப்படுத்துவது, சர்வதேச பிரச்னைகளில் இணைந்து செயல்படுவது என, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த, இந்த, 75வது ஆண்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தன் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது:
உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை வைத்துள்ள இரண்டு மிகப் பெரிய அண்டை நாடுகளாக விளங்குகிறோம். ஸ்திரமான, யூகிக்கக் கூடிய மற்றும் நட்புடன் கூடிய உறவு, இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே பலனளிக்கும்.
இந்தியா - சீனா இடையேயான உறவில் ஸ்திரமான மற்றும் வலுவான வளர்ச்சியை ஏற்படுத்த, இந்த 75வது ஆண்டு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'இந்தியா - சீனாவின் உறவுகளின் வளர்ச்சி, உலகின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு வழி வகுப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட உலகத்தை சாத்தியமாக்கவும் உதவும்' என, தெரிவித்துள்ளார்.