ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கலில் கற்றல் திட்டங்கள்
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கலில் கற்றல் திட்டங்கள்
ADDED : டிச 05, 2025 02:20 AM

திண்டுக்கல்: 'பள்ளி மாணவர்களுக்கான கற்றல் திட்டங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை மாநில அரசு செயல்படுத்தி வரும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கல் நிலவுகிறது.
விரைந்து ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்,' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,554 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 52 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பணி ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கற்றல், கற்பித்தல் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஆனால், அதை சரியாக செயல்படுத்த போதிய ஆசிரியர்கள் உள்ளனரா என அரசு கருத்தில் கொள்வதில்லை.
நிர்வாக பணிகள், மாணவர் நலத்திட்டங்களை நிர்வகித்தல், கல்வித்துறை சார்ந்த தரவுகளைப் பதிவேற்றம் செய்தல் போன்ற காரணிகள் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறாகவும் அமைகிறது. இந்த பணிசுமையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்னும் பல சவால்கள் நீடிக்கின்றன.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்கள் நல்ல விஷயம் தான். ஆனால் அது மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைய ஆசிரியர்களின் பணி அவசியம்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் முழுமையாக எதையும் செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. எமிஸ் பதிவு, கலைதிருவிழா, திறன் பயிற்சி என அடுக்கடுக்கான பணிகள் இருப்பதால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. மேலும் கற்பித்தல் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
திட்டங்கள் பள்ளிகளில் முறையாக செயல்படுத்தப்படுவதை, ஆவணங்கள் அடிப்படையில் மட்டும் ஆராயாமல், கள நிலவரத்தையும் ஒப்பிட்டு உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். எனவே திட்டங்கள் அறிவிப்பதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் ஆசிரியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

