திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகள்: விஜய் கட்சி புதுயோசனை
திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகள்: விஜய் கட்சி புதுயோசனை
ADDED : மே 29, 2024 03:54 AM

சென்னை: “திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோர், முதியோர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம்,” என, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
உலக பட்டினி தினத்தையொட்டி, 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வாயிலாக, அன்னதானம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் நேற்று நடந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:
எங்கள் கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி, அன்னதானம் வழங்கினோம். இன்று ஒருநாள் மட்டும் உணவு கொடுத்தால் போதாதது. விஜய் அறிவுறுத்தல்படி, இனிவரும் காலங்களில் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடக்கும் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, அருகில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் உணவு வழங்கப்படும். அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுவர்.
திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, 1,000 முதல் 1,500 பேர் வரைக்கும் உணவு தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில், 700 பேர் மட்டுமே சாப்பிடுகின்றனர்; உணவு மீதமாகிறது. பாத்திரங்களை கழுவ வேண்டும் என்று கூறி, இரவு 11:00 மணிக்கு குப்பையில் கொட்டுகின்றனர்.
அதுபோன்று மீதமாகும் உணவுகளை, எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெற்று, 'பார்சல்' செய்து எடுத்து சென்று ஆதரவற்றோர், முதியோர், ஏழைகளுக்கு வழங்குவர். இதற்காக, திருமண மண்டப மேலாளர்களை தொடர்புகொண்டு, தங்களது மொபைல் போன் எண்களை வழங்கவுள்ளனர். திருமண மண்டப மேலாளர்கள் அழைத்தால், விரைந்து சென்று உணவுகளை சேகரித்து எடுத்து செல்வர். இவ்வாறு அவர் கூறினார்.