மிச்சமாகி போன மிக்சர், மைசூர்பாகு முப்பெரும் விழாவில் கோஷ்டி பூசல்
மிச்சமாகி போன மிக்சர், மைசூர்பாகு முப்பெரும் விழாவில் கோஷ்டி பூசல்
ADDED : செப் 20, 2025 05:28 AM

தி.மு.க., முப்பெரும் விழாவில் பெய்த திடீர் மழையாலும், சில மாவட்டச் செயலர்களின் உள்குத்து வேலையாலும், மைசூர்பாகு, மிக்சர், பிஸ்கட் பாக்கெட்டுகள் மிச்சமான தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., முப்பெரும் விழா கடந்த 17ம் தேதி கரூரில் நடந்தது. அவ்விழாவில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில், அம்மாவட்ட தி.மு.க.,வில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தி.மு.க., மகளிரணியைச் சேர்ந்த இளம்பெண்களுக்கு, கட்சிக் கொடி வண்ணத்தில் சுடிதார், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள், ஆண்களுக்கு வேட்டி, சட்டை, இளைஞர்களுக்கு டி - சர்ட், பேன்ட் ஆகியவை வழங்கப்பட்டன.
முப்பெரும் விழாவுக்கு எப்படியும் ஒரு லட்சம் பேர் திரள்வர் என முடிவெடுத்து, ஒரு லட்சம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாற்காலியிலும் வைக்கப்பட்ட ஒரு பையில் குடிநீர் பாட்டில், மைசூர் பாகு, மிக்சர், டிஸ்யூ பேப்பர், பேப்பர் பிளேட் உள்ளிட்டவை இருந்தன. ஒரு லட்சம் நாற்காலிகள் போக, வெளியே நிற்பவர்களுக்கும் குடிநீர் பாட்டில் அடங்கிய பைகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மைதானத்தின் நுழைவாயிலில் செண்டை மேளம் ஒலிக்க, ஒயிலாட்டம் உள்ளிட்ட நடனக் குழுவினர், முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் வாகனம் வருவதற்கு வசதியாக, மைதானத்தின் நடுவே, புதிதாக தார் சாலை போடப்பட்டிருந்தது. இதன் வழியாக தான் பிரசார வேனில், முதல்வர் ஸ்டாலின் கையசைத்தபடி உற்சாகமாக வந்தார்.
பறக்க விடப்பட்ட ராட்சத பலுான்களும் முதல்வர் ஸ்டாலினையும், தொண்டர்களையும் பரவசப்படுத்தின. விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''தி.மு.க., பொதுக் கூட்டங்களையே மாநாடு போல நடத்தக்கூடியவர் செந்தில் பாலாஜி. முப்பெரும் விழா என்றால் சும்மா விடுவாரா? அசர வைத்ததுடன் இல்லாமல் வியக்கவும் வைத்து விட்டார்,'' என, பாராட்டினார்.
இந்த பாராட்டு ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம், கடைசி வரிசைகளில் நாற்காலிகள் காலியாக இருந்தன. அவற்றில் அமர வேண்டிய கட்சியினருக்காக வைக்கப்பட்டிருந்த மைசூர் பாகு, மிக்சர், குடிநீர் பாட்டில்கள் கேட்பாரின்றி கிடந்தன.
இதற்கு திடீரென பெய்த மழையும், சில மாவட்டச் செயலர்களின் உள்குத்து வேலையும் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் நடந்த விஜய் மாநாட்டின்போது, கடுமையான வெயில் வாட்டியதால், அவரது கட்சியினர் தவித்தனர். அதை விமர்சித்த தி.மு.க.,வினர், 'மாநாட்டுக்கு வருவோரை பாதுகாப்பாக அமர வைக்க, பந்தல் போட வேண்டியது தானே' என கூறினர்.
அதேபோல் திடீர் மழை பெய்து, தி.மு.க.,வின் முப்பெரும் விழாவை சீர்குலைத்தது. அது பற்றி விமர்சித்த த.வெ.க.,வினர், 'மழையில் தொண்டர்கள் நனையாமல் இருக்க, பந்தல் போட்டிருக்கலாமே' என பதிலடி கொடுத்து விமர்சித்தனர்.
இது குறித்து, ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
மழை பெய்ய ஆரம்பித்ததுமே, கடைசி வரிசைகளில் இருந்த கூட்டம் கலைந்து விட்டது. இருப்பினும், குடை பிடித்தபடியும், நாற்காலிகளை தலைக்கு மேல் துாக்கி வைத்தும் தொண்டர்கள் நின்றனர். ஆனால், மழை காரணமாக, மைதானத்திற்கு வராமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஊருக்கு திரும்பினர்.
மாநாட்டில் நாற்காலிகள் காலியாக இல்லாமல், நிரம்பி வழிந்தால் செந்தில் பாலாஜிக்கு பெயர் கிடைத்து விடும் என்பதால், அதை தடுக்கும் வகையில், சில மாவட்டச் செயலர்கள், தொண்டர்களை அழைத்து வராமல், உள்குத்து வேலை செய்துள்ளனர்.
ஆனாலும், கொட்டும் மழையிலும் முதல்வர் ஸ்டாலின் பேச்சை கேட்க கட்டுக்கோப்பாக தொண்டர்கள் காத்திருந்தனர். மழையில் நனைந்தபடி நிற்கும் தொண்டர்களை பார்த்து, அவர் நெகிழ்ந்து பேசினார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -