'சட்டசபை நாயகர் கலைஞர்' நுாற்றாண்டு விழா நுால் வெளியீடு
'சட்டசபை நாயகர் கலைஞர்' நுாற்றாண்டு விழா நுால் வெளியீடு
ADDED : டிச 10, 2024 03:47 AM

சென்னை: சபாநாயகர் அப்பாவு தலைமையிலான குழு தயாரித்துள்ள, 'சட்டசபை நாயகர் - கலைஞர்' என்ற நுாற்றாண்டு விழா சிறப்பு நுாலை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
இந்நுாலில், சட்டசபையில் கருணாநிதி ஆற்றிய முக்கிய உரைகள், அவர் முதல்வராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட முக்கிய தனி தீர்மானங்கள், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஆன்மிக தலைவர்கள் போன்றோரின் வாழ்த்துச் செய்திகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நுால் வெளியீட்டு நிகழ்ச்சியில், பள்ளி, கல்லுாரிகள் அளவில் நடந்த பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசாக, 1 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 75,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 50,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலை மற்றும் கருணாநிதி உருவ சிலையை முதல்வர் வழங்கினார்.
சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.