மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை
UPDATED : ஏப் 03, 2024 10:30 AM
ADDED : ஏப் 03, 2024 07:33 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் சிசிடிவி வீடியோ வெளியானதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வனத்துறை மற்றும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாடு சாலையில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலா வரும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதி எதுவும் பக்கத்தில் இல்லாத மயிலாடுதுறையில் சிறுத்தை உலாவுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனால் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் வனத்துறை, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். சிறுத்தையை கண்டால் 9626709017 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் தர போலீசார், வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளிக்கு விடுமுறை
சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

