ADDED : டிச 02, 2024 02:33 AM
சென்னை: 'வர்தா புயலின் போது ஏற்பட்ட சேதங்களை ஒப்பிடுகையில், 'பெஞ்சல்' புயலில் மரங்களின் சேதம் குறைவு' என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2016 டிசம்பரில், வர்தா புயலின் போது, சென்னையில், 17,000க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
நேற்று, புயல் கரையை கடந்த போது, சென்னை, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இப்பகுதிகளில் காற்றின் வேகத்தால், பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பெஞ்சல் புயலால் சேதமடைந்த மரங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கணக்கெடுப்பு பணி முடிந்ததும், முழு விபரம் தெரிய வரும்.
'எனினும், வர்தா புயலின் போது விழுந்த மரங்களை விட, தற்போது விழுந்த மரங்களின் எண்ணிக்கை குறைவு தான்' என்றனர்.