'தீ பரவட்டும்' என ஹிந்தி எதிர்ப்பு அரசியல்; அமைச்சர்கள், தி.மு.க.,-மா.செ.,க்கள் தயக்கம்
'தீ பரவட்டும்' என ஹிந்தி எதிர்ப்பு அரசியல்; அமைச்சர்கள், தி.மு.க.,-மா.செ.,க்கள் தயக்கம்
UPDATED : ஜன 27, 2026 02:35 AM
ADDED : ஜன 27, 2026 02:33 AM

'தீ பரவட்டும்' என்ற தலைப்பில், ஹிந்தி எதிர்ப்பு அரசியலை மையப்படுத்தினால், சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என கருதி, மொழி அரசியலை முன்னெடுக்க, தி.மு.க., அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் தயக்கம் காட்டுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
1960களில், தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு போராட்டங்களை நடத்தி, தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது. ஹிந்திக்கு முக்கியத்துவம் தந்த, காங்., அரசை எதிர்த்து அரசியல் செய்த தி.மு.க., அந்த காங்கிரசுடனேயே தேர்தல் கூட்டணி அமைத்தது.
'இது கொள்கை கூட்டணி அல்ல; தேர்தல் கூட்டணி' என, தி.மு.க., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காங்., முன்னாள் தலைவர் சோனியா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முயற்சியில், 2004 லோக்சபா தேர்தலில் உருவான கூட்டணி, வரும் சட்டசபை தேர்தலில் தொடருமா என கேள்விக் குறியாகி உள்ளது.
தி.மு.க., - காங்., கூட்டணி அமைத்து 22 ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் ஹிந்தி எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கவில்லை. வரும் தேர்தலில் 'தீ பரவட்டும்' என்ற தலைப்பில், ஹிந்தி மொழி எதிர்ப்பு அரசியலில், தி.மு.க., தீவிரம் காட்டுகிறது.
மொழிப்போர் தியாகிகள் நாளையொட்டி, சென்னையில் உள்ள, தாளமுத்து, நடராஜன், தருமாம்பாள் நினைவிடங்களில், வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மாணவர் அணி சார்பில் 10,000 பேர் கருப்பு 'டி சர்ட், பேண்ட்' அணிந்து பேரணியாக பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், பேசிய முதல்வர் ஸ்டாலின், ''வரும் தேர்தல் ஆரிய, திராவிட போர்; திராவிடப் போரின் மற்றொரு களம் தான், 2026 தேர்தல் களம்; டில்லி ஆதிக்கத்திற்கு, தமிழகம் என்றைக்கும் தலை குனியாது,'' என்றார்.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம் தவிர, மற்ற மாவட்டங்களில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களுக்கு, மாணவர்களை அழைத்து வர, தி.மு.க., மாவட்டச் செயலர்கள், அமைச்சர்கள் தயக்கம் காட்டி உள்ளனர்.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: இந்தக் கால இளைஞர்களின் எதிர்காலத்திற்கு, ஹிந்தி மொழி தடையாக இருக்கப்போவதில்லை. இளைஞர்கள், வேலை தேடுவோருக்கு ஹிந்தி கூடுதல் திறமையாக கருதப்படுகிறது. மாணவர்கள் கல்வி வளர்ச்சி, இளைஞர்களின் வேலை வாய்ப்புகளில், தி.மு.க., அக்கறை காட்டி, தேர்தல் அறிக்கை வெளியிட்டு, வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.
மாணவர்களை மையப்படுத்தி, மொழி அரசியல் நடத்தினால் தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என, மூத்த மாவட்டச் செயலர்கள், அமைச்சர்கள் தயங்கியதால், பெரும்பான்மையாக, வீரவணக்க நாள் கூட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

