மாம்பழ சின்னத்தை முடக்குவோம்: தேர்தல் ஆணையம் பதில் மனு
மாம்பழ சின்னத்தை முடக்குவோம்: தேர்தல் ஆணையம் பதில் மனு
ADDED : டிச 05, 2025 07:14 AM

பா.ம.க.,வுக்கு உரிமை கோரும் விஷயத்தில், சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு, ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்புக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்த நிலையில், கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது, ராமதாஸ் தரப்பில், 'ஒரு கட்சியில் இரு பிரிவுகள் இருந்தால், அதில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது' என வாதிடப்பட்டது.
இதையடுத்து, அன்புமணி தரப்பில், 'கட்சியின் அதிகாரம் மற்றும் பதவி தொடர்பாக, உரிமையியல் வழக்கு மட்டுமே தொடுக்க முடியும்' என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'பா.ம.க.,வில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? தமிழகத்தில் உடனே தேர்தல் நடைபெற உள்ளதா?' என கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராமதாஸ் தரப்பு, 'பா.ம.க.,வில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். வரும் 2026 ஏப்ரலில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது' என கூறியது.
இதற்கிடையே, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல், 'ஒரு கட்சிக்குள் இரு பிரிவுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் அடிப்படையில் முடிவு எடுப்போம்' என்றார்.
நீதிபதி குறுக்கிட்டு, 'தமிழகத்தில் தேர்தல் வந்தால், வேட்பாளர்களை அங்கீகரிப்பது யார்? யார் கையெழுத்தை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளும்?' என கேட்டார்.
அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில், 'பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளில், இரு தரப்புக்கிடையே பிரச்னை இருந்தால், வேட்பாளர்களுக்கான படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் இருதரப்பும் கையெழுத்திட முடியாது. மேலும், கட்சி சின்னமும் முடக்கி வைக்கப்படும்.
'பிரச்னையை தீர்க்க உரிமையியல் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். தேர்தல் கமிஷனிடம் தற்போது உள்ள ஆவணங்களின்படி, பா.ம.க., தலைவர் அன்பு மணி தான்' என பதில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில், ஒரு சாராரின் கருத்தைப் பெற்று தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க முடியாது.
'இது தேர்தல் கமிஷன் அதிகார வரம்புக்குள் வராது. எனவே, பா.ம.க., மீதான உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை ராமதாஸ் தரப்பு நாடலாம்' என கூறப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -

