சென்னை: 'போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், கரூரில் விபத்து நடந்ததா என்பது குறித்து முழு விசாரணை நடத்தி, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட 30க்கும் அதிகமானோர் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பலர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவர் என்பதை முறையாக கணக்கிட்டு, அதற்கு ஏற்ப இடத்தை தேர்ந்தெடுத்து கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் மக்கள் பாதுகாப்புக்கு தேவையான அளவு போலீசாரை பணியமர்த்துவதும், காவல் துறையின் பொறுப்பு.
விஜய் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யபட்டதாகவும் தகவல் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாக தமிழக அரசும், காவல் துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க.,வினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த போலீசாரையும் அனுப்பி, பாதுகாப்பு கொடுக்கும் அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருப்பது வழக்கமாகி இருக்கிறது.
உடனே, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைபட்டது குறித்தும், முழு விசாரணை நடத்தி, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.