'செல்பி' எடுத்துக்கலாம் வாங்க! 100 நாள் வேலையில் ஆள்மாறாட்ட மோசடி
'செல்பி' எடுத்துக்கலாம் வாங்க! 100 நாள் வேலையில் ஆள்மாறாட்ட மோசடி
ADDED : செப் 02, 2025 05:52 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், குறைவான ஆட்களே பணி செய்யும் நிலையில், சம்பள கணக்கு காட்ட, வழியில் நடந்து செல்பவர்களை எல்லாம் அழைத்து நிற்க வைத்து போட்டோ எடுத்து, ஆள்மாறாட்டம் செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடலுார் மாவட்டத்தில், 14 ஊராட்சி ஒன்றியங்களில், 100 நாள் வேலை திட்டத்தில், 4 லட்சத்து 26,096 குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஊராட்சி தலைவர்கள் கட்டுப்பாட்டில் இந்த வேலைத்திட்டம் நடந்ததால், பல ஊராட்சிகளில் போலி பெயர் பட்டியல் தயார் செய்து, அதில் கிடைக்கும் கூலி தொகையை கூட்டு கொள்ளையடித்தனர்.
அதனால் தான், கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. தற்போது ஊராட்சி தலைவர் பதவி முடிந்து விட்டதால் ஊராட்சி செயலர்கள், 100 நாள் வேலை திட்டத்தை கண்காணிக்கின்றனர்.
எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர் என, அதிகாரிகளுக்கு தினமும் குழு புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அதில், ஆட்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
ஆனால், குறைவான நபர்களே பணி செய்யும் நிலையில், சம்பள கணக்கு எழுத புகைப்படம் எடுத்து அனுப்புவது, பணித்தள பொறுப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.
இதனால், பணி செய்பவர்களுடன், அவ்வழியாக நடந்து செல்பவர்களை அழைத்து, 'வாங்க ஒரு செல்பி எடுத்துக்கலாம்' என, அழைத்து நிற்க வைத்து, படம் எடுத்து, அவர்களையும் ஊழியர்கள் போல கணக்கு காட்டுகின்றனர்.
போட்டோவில் இருப்பவர்களுக்கும், பெயர் பட்டியலில் உள்ள பெயருக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை.
இது தொடர்பாக, கம்மாபுரம் ஊராட்சி, பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஒருவர், கூடுதல் கலெக்டரிடம் புகார் செய்ததையொட்டி, 100 நாள் வேலையில் ஆள்மாறாட்ட மோசடி வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
சம்பந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதே போல மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் அதிகாரிகள் ஆசியுடன் நடக்கும் முறைகேட்டை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

