ADDED : ஏப் 11, 2025 12:22 AM
சிவகங்கை:குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரி, முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவூட்டும் கடிதம் அனுப்பும் போராட்டத்தை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் துவக்கியுள்ளனர்.
சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டாகியும், இது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வரவில்லை.
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலர் பாண்டி கூறியதாவது:
குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை மாதம் 7,850 ரூபாய், உரிய அகவிலைப்படி 53 சதவீதம் வழங்கக்கோரி கடிதம் எழுதும் போராட்டத்தை துவக்கியுள்ளோம்.
பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், இலவச மருத்துவ காப்பீடு, பண்டிகை முன்பணம், பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஏற்கனவே, ஏப்ரல் 9ம் தேதி மாநில அளவில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தோம்.
ஏப்ரல் 16ல் நடக்கும் சத்துணவு துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில், மறியல் போராட்டத்தை ஒத்தி வைத்து, நினைவூட்டும் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.