ADDED : ஜன 25, 2026 05:40 AM
சென்னை: மழைக் காலங்களில் திரண்ட, கருமேகங்களின் இடையே ஏற்படும் உரசல் காரணமாக, தீப்பொறி போன்ற வெளிச்ச கீறல்கள் ஏற்படுகின்றன. இவை மின்னல்கள் என்று கூறப்படுகின்றன. மின்னலை தொடர்ந்து, பெரும் சத்தத்துடன் இடி முழக்கம் ஏற்படுகிறது. இடி, மின்னலின் அளவை வைத்து, அடுத்து வரும் மழையின் தாக்கம் மதிப்பி டப்படுகிறது.
பெருமழை, வெள்ளம் தொடர்பாக ஆய்வு செய்யும்போது, மின்னல் தொடர்பான தரவுகளை, கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமா கிறது. இதற்காக, இந்திய வானிலைத் துறை, ஒடிஷா மாநிலம் பாலாசோரில், நாட்டின் முதலாவது மின்னல் ஆய்வு மையத்தை அமைத்துள்ளது.
இதையடுத்து, மின்னல் குறித்த உயர் ஆய்வுக்காக, 1962ல் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையம், புனேவில் ஏற்படுத்தப்பட்டது. இத்துடன் மின்னல் குறித்த, நிகழ்நேர தரவுகளை அளிக்கும் வகையில், இந்திய வானிலைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகி றது. தமிழகத்தில், மின்னல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேலுார், திருவாரூர், கோவை, மதுரை மாவட்டங்களில் மின்னல் தரவு திரட்டுதல் மற்றும் ஆய்வு மையம் அமைக்க, மத்திய அரசின், இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இரண்டாம் கட்டமாக, நாகப்பட் டினம், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், மின்னல் ஆய்வு மையம் அமைக்க உள்ளோம். இந்த மையங்கள் வாயிலாக, மின்னல் களின் தாக்கம் குறித்த தகவல்களை, முன்கூட்டியே அறிந்து, பேரிடர் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

