எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்; கடும் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்; கடும் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
UPDATED : பிப் 04, 2026 05:26 PM
ADDED : பிப் 04, 2026 11:34 AM

புதுடில்லி:
பார்லிமென்ட்டில் இன்று (பிப்ரவரி 04) லோக்சபா கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் உரை இன்று இல்லை.
கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று காலை சபை கூடியதும், இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரி குறைப்பு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டு மதியம் மீண்டும் கூடியது.
அப்போது, ராணுவ முன்னாள் தளபதி எழுதிய புத்தகம் குறித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சபையில் மீண்டும் பேச முயன்றார். அவருக்கு ஆதரவாக காகிதங்களை கிழித்தெறிந்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் உட்பட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஒத்திவைப்பு
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 04) லோக்சபா கூடியது எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய போதும் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தது இன்று இடம்பெறவில்லை.
அதேநேரத்தில் ராஜ்யசபா நடந்தது.
போராட்டம்
எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பிரதமர் பதிலுரை!
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதத்தில் எம்பிக்களின் கருத்துகளுக்கு லோக்சபாவில் இன்று பிரதமர் மோடி பதிலுரை ஆற்றுகிறார்.

