'லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்' இந்திய கலாசாரத்திற்கு அதிர்ச்சி: உயர்நீதிமன்றம் கருத்து
'லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்' இந்திய கலாசாரத்திற்கு அதிர்ச்சி: உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : ஜன 20, 2026 03:02 AM

மதுரை: ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாகக்கூறி சேர்ந்து வாழ்ந்து பாலியல் உறவு கொண்ட நபரின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. 'லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்' இந்திய சமூகத்திற்கு கலாசார அதிர்ச்சி என அதிருப்தியை பதிவு செய்தது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். இதை பிரபாகரனின் பெற்றோர் ஏற்கவில்லை. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். திருச்சியில் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பாக வசித்தனர். பெண் மாயமானதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். பெண்ணை அவரது வீட்டில் பிரபாகரன் ஒப்படைத்தார்.
ரயில்வே வாரியத் தேர்வை முடித்த பின் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக பிரபாகரன் உறுதியளித்தார். கலப்புத் திருமணம் செய்துகொண்டால், இருவரையும் கொன்றுவிடுவோம் என பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டினர். பின்னர் பிரபாகரன் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு கொண்டு ஏமாற்றியதாக பெண் புகாரில் பிரபாகரன் மீது மணப்பாறை மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
அவர் பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ளத் தயார். வழக்கை சமரச தீர்விற்கு அனுப்ப வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார். பிரச்னையைத் தீர்க்க பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது என மனுதாரர் நிலைப்பாடு எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட பின் இவ்வாறு கூறுகிறார். சேர்ந்து வாழும் ('லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்) என்னும் கருத்து காரணமாக பாதிக்கப்படும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதற்கு பலியாகும் பிரிவினராக பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.
பாதுகாப்பில்லாத உறவு முறை
'லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்' இந்திய சமூகத்திற்கு ஒரு கலாசார அதிர்ச்சியாகும். அது பரவலாக நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் தங்களை நவீனமானவர்கள் என கருதி, அந்த உறவை தேர்வு செய்கிறார்கள். திருமணம் வழங்கும் எந்த பாதுகாப்பையும் 'லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்' வழங்குவதில்லை என்பதை அவர்கள் சிறிது காலத்திற்குப் பின் உணரும்போது யதார்த்தம் நெருப்பைப் போல அவர்களைச் சுடுகிறது.
இரு தரப்பினரிடையே சமரசம் செய்ய இந்நீதிமன்றம் முயற்சித்தது. திருமணம் ஒரு தீர்வாக அமையாதபோது, இந்நீதிமன்றம் பராமரிப்புத் தொகை அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் பிரச்னையைத் தீர்க்க முயற்சித்தது.
அப்பெண், தான் பணத்திற்காக இதை செய்ததாக அல்லது பணத்திற்காக உறவு கொண்டதாக ஆண்கள் தன்னை முத்திரை குத்திவிடுவர் எனக்கூறி, அதை ஏற்க மறுத்தார். இது பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒரே பிரிவு பி.என்.எஸ்.,69. ( ஏமாற்றி பாலியல் உறவு கொள்வது). பாதிக்கப்பட்ட பெண் மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உடையவர். அவரை மனுதாரர் திருமணம் செய்ய மறுக்கிறார். மனுதாரர் மீது பி.என்.எஸ்.,பிரிவு 69ன் கீழ் வழக்கு தொடர வேண்டும். குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளதால் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

