'வாழும் கைவினை பொக்கிஷம்' விருது ஏழு பேருக்கு வழங்கி கவுரவிப்பு
'வாழும் கைவினை பொக்கிஷம்' விருது ஏழு பேருக்கு வழங்கி கவுரவிப்பு
ADDED : செப் 17, 2025 02:02 AM

சென்னை:கைவினை கலைஞர்கள் ஏழு பேருக்கு, 'வாழும் கைவினை பொக்கிஷம்' விருதுகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
கைவினை தொழிலுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினை கலைஞர்களுக்கு, தமிழக அரசு சார்பில், 'வாழும் கைவினை பொக்கிஷம்' என்ற விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024 - 25ம் ஆண்டிற்கான விருதுக்கு, கன்னியாகுமரியைச் சேர்ந்த, இயற்கை நார் பொருட்கள் தயாரிப்பாளர் ராணி வின்சென்ட்; தஞ்சாவூரைச் சேர்ந்த உலோக தகட்டு வேலை கலைஞர் வீழிநாதன்; விருதுநகரைச் சேர்ந்த மியூரல் ஓவிய கலைஞர் இளவரசி சொக்கர்; திருவண்ணாமலையைச் சேர்ந்த கற்சிற்ப கலைஞர் குப்பு சுப்பிரமணி; கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சித்திர தையல் கலைஞர் பூவம்மாள்; சேலத்தைச் சேர்ந்த மர சிற்ப கலைஞர் துரைராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு, நேற்று தலைமைச் செயலகத்தில், விருதுக்கான 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதேபோல், 2024 - 25ம் ஆண்டிற்கான, பூம்புகார் மாநில விருது, 10 கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்களுக்கு விருதுடன், 4 கிராம் தங்கப் பதக்கம், 50,000 ரூபாய் பரிசுத் தொகை, தாமிர பத்திரம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், குறு, சிறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், தலைமைச் செயலர் முருகானந்தம், கைத்தறி துறை செயலர் அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

