கோவையில் ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்: அண்ணாமலையை வீழ்த்த வியூகமா?
கோவையில் ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்: அண்ணாமலையை வீழ்த்த வியூகமா?
ADDED : ஏப் 04, 2024 01:27 PM

கோவை: கோவையில் ஏப்.,12ல் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அவர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வரவுள்ளதாக தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராகுல், ஏப்.,12ம் தேதி தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி, கோவையில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர். திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடும் நிலையில், கோவை தொகுதியில் திமுக வேட்பாளரே போட்டியிடுகிறார்.
அப்படியிருக்கையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் வேறு மாவட்டத்தை தேர்ந்தெடுக்காமல் கோவையை ஏன் தேர்ந்தெடுத்தனர் என கேள்வி எழுந்துள்ளது. கோவையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது, அந்த தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரும் மாநில தலைவருமான அண்ணாமலையை வீழ்த்த திமுக - காங்., வியூகம் அமைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

