சமூகநீதியை பின்பற்றும் ஒரே கட்சி பா.ஜ., மட்டுமே: அண்ணாமலை பேச்சு
சமூகநீதியை பின்பற்றும் ஒரே கட்சி பா.ஜ., மட்டுமே: அண்ணாமலை பேச்சு
ADDED : ஏப் 04, 2024 11:54 AM

திருப்பூர்: ''இன்றைக்கு வருபவர்கள் போகிறவர்கள் எல்லாம் சமூகநீதி பேசுகிறார்கள். அவர்களுக்கும் சமூகநீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியலில், ஆட்சியில் உண்மையாக சமூகநீதியை பின்பற்றும் ஒரே கட்சி பா.ஜ., தான்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடியில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது: கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தான் இந்தியாவில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத அரசியல் கட்சியினர். அவர்களிடம் ஏன் தொகுதியில் பணியாற்றவில்லை எனக் கேட்டால், மத்தியில் பிரதமர் மோடி இருப்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்கின்றனர். 3வது முறையும் அவர்தான் பிரதமர் ஆகப்போகிறார். எனவே மீண்டும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வென்றால் அதையேதான் சொல்வார்; பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்.
இன்றைக்கு வருபவர்கள் போகிறவர்கள் எல்லாம் சமூகநீதி பேசுகிறார்கள். அவர்களுக்கும் சமூகநீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் 76 அமைச்சர்களை கொண்ட மத்திய அமைச்சரவையில் 11 பேர் பெண்கள், 12 பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள், 27 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் திமுக.,வில் 35 அமைச்சர்களில் 2 பெண்கள், 2 பட்டியலினத்தவர்கள். அரசியலில், ஆட்சியில் உண்மையாக சமூகநீதியை பின்பற்றும் ஒரே கட்சி பா.ஜ., தான். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகளை தான் பிரதமர் மோடி நம்புகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

