ADDED : மார் 11, 2024 11:57 PM

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக காவல் துறையில் சிறப்பு டி.ஜி.பி.,யாக பதவி வகித்தவர் ராஜேஷ்தாஸ், 60. இவர், 2021ல், முதல்வர் பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தார்.
பணி முடிந்து காரில் விழுப்புரம் புறப்பட்ட போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரை, குற்றத்தடுப்பு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ராஜேஷ் தாசுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்தது.
அதனால், சரணடைவதில் இருந்து விலக்கு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராஜேஷ் தாஸ் தலைமறைவாக உள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கினர். ராஜேஷ் தாசை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

