சிவாஜியின் அன்னை இல்லம் 'ஜப்தி' பிரபு, ராம்குமார் பதிலளிக்க உத்தரவு
சிவாஜியின் அன்னை இல்லம் 'ஜப்தி' பிரபு, ராம்குமார் பதிலளிக்க உத்தரவு
ADDED : மே 09, 2025 03:40 AM
சென்னை:மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின், அன்னை இல்லத்தை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ததற்கு தடை விதிக்க கோரிய மேல் முறையீட்டு மனுவுக்கு, நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோர் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள, ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தனர். இதற்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அத்தொகையை வட்டியுடன் சேர்த்து, 9.39 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், கடனை திருப்பி செலுத்தாததால், சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய, தனி நீதிபதி உத்தரவிட்டார். பின், அன்னை இல்லம் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டதால், ஜப்தி உத்தரவை ரத்து செய்தார். இதை எதிர்த்து, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில், 'தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, அன்னை இல்லத்தை மீண்டும் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன் அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தனி நீதிபதி சொத்து யாருடையது என்பது தொடர்பான முழுமையான விசாரணையை முடிக்காமல், இடைக்கால உத்தரவை திரும்ப பெற்று இருக்கிறார். அன்னை இல்லத்தின் உரிமை என்பது, முழுமையான விசாரணைக்கு பின்னரே முடிவு செய்ய முடியும். இதனை இடைக்கால மனு மீது முடிவு செய்ய முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என, வாதிட்டார்.
நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்று, ஜப்தி நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. இதில், எவ்வித தவறும் இல்லை' என்றார்.
பின், நீதிபதிகள், 'தனி நீதிபதியின் உத்தரவுக்கு, தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது. இம்மனு குறித்து, நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும்,' என, உத்தரவிட்டு, ஜூன் 3ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.