லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் : கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் : கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
UPDATED : ஆக 24, 2011 06:02 PM
ADDED : ஆக 24, 2011 03:36 AM
நாமக்கல்: 'லாரி உரிமையாளர்கள் சங்க கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதையடுத்து, தென்னிந்திய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், சீரான சுங்கவரி வசூலிக்க வேண்டும். சரக்கு இல்லாமல் காலியாகச் செல்லும் வாகனங்களுக்கு, 25 சதவீத சுங்கவரி மட்டும் வசூலிக்க வேண்டும். டீசல், டயர் உதிரி பாகங்கள் மீது, ஏற்றப்பட்ட விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 18ம் தேதி நள்ளிரவு முதல், தென்னிந்திய லாரி வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியது.
தொடர்ந்து, ஐந்தாவது நாளாக நடந்த லாரி வேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பல கோடி மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் தேக்கமடைந்தன. மேலும், பெட்ரோல், காஸ், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றமடையும் அபாய நிலை உருவாகியது. இச்சூழலில், தென்னிந்திய லாரி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகளுடன், 22ம் தேதி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்., தலைவர் சண்மு கப்பா தலைமையிலான
நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்ட பேச்சுவார்த்தையில், முடிவு எதுவும் எட்டப்படாமல் இழுபறியில் முடிந்தது. அதையடுத்து, நேற்று இரண்டாம் நாளாக, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகள் சந்தோபத் உபாத்யாயா உள்ளிட்டோருடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி, கோபால் நாயுடு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், லாரி உரிமையாளர்களது கோரிக்கை ஏற்கப்பட்டதால், தென்னிந்திய லாரி வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தாவது: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்படும், 94 சுங்கச்சாவடியில் அந்தந்த மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு, 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருகிறது. அதுபோல், பத்து சக்கர வாகனங்களுக்கு சுங்கச் சாவடியில், 3.45 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம், 2.40 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைப்பு சம்பந்தமாக, சுங்கச்சாவடி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களை நேரில் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, கட்டணம் குறைக்கவும், இன்சூரன்ஸ் குறைப்பது சம்பந்தமாக இச்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தி குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். அதையேற்று, தென்னிந்திய லாரி வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.