கிரெடிட் கார்டு தொகையை செலுத்தாத நபரின் பணி நியமன ஆணை ரத்து; எஸ்.பி.ஐ., உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கிரெடிட் கார்டு தொகையை செலுத்தாத நபரின் பணி நியமன ஆணை ரத்து; எஸ்.பி.ஐ., உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
UPDATED : ஜூன் 26, 2025 02:49 PM
ADDED : ஜூன் 26, 2025 02:34 PM

சென்னை: கிரெடிட் கார்டு உள்ளிட்ட கடன் தொகைகளை செலுத்தாமல் மோசமான சிபில் (CIBIL) ஸ்கோரை வைத்த ஊழியரின் பணி நியமனத்தை ரத்து செய்த எஸ்.பி.ஐ., வங்கியின் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவன வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ., வங்கி, சி.பி.ஓ., (CBO) என்ற பணியிடத்திற்கு ஒருவரை நியமனம் செய்தது. அதன்பிறகு, அந்த நபரின் சிபில் ஸ்கோரை ஆய்வு செய்து பார்த்த போது, 3 தனிப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு தொகைகளை செலுத்தாமல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த நபரின் பணி நியமன உத்தரவை எஸ்.பி.ஐ., வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த பணிக்கு நியமிக்கப்படுபவர்கள், எந்த கடன் நிலுவை தொகையையும் வைத்திருக்கக் கூடாது என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில் வாதமாக முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாலா, 'விண்ணப்பத்தில் சிபில் ஸ்கோர் தெளிவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தை கையாளும் நபர், பண விவகாரத்தில் ஒழுக்கம் கடைபிடிப்பதே முறையானதாக இருக்கும். சிபில் ஸ்கோர் சரியாக இல்லாதவர் மீது எப்படி நம்பிக்கை வரும்,' என்று கேள்வி எழுப்பினார். எனவே, சிபில் ஸ்கோரை காரணம் காட்டி, பணி நியமன ஆணையை எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் ரத்து செய்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பளித்தார்.