கோர்ட் அவமதிப்பில் கல்லுாரி கல்வி இயக்குநர் குற்றவாளி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு..
கோர்ட் அவமதிப்பில் கல்லுாரி கல்வி இயக்குநர் குற்றவாளி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு..
ADDED : ஏப் 27, 2025 05:36 AM

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லுாரி கல்வி இயக்குநர் குற்றவாளி என்று தீர்மானித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்பதை நிரூபிக்க, ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ், ஆறு கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கல்லுாரிகளில் காலியாக இருந்த, 130 உதவிப் பேராசிரியர்கள், ஒரு நுாலகர், ஒரு உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கடந்தாண்டு அறக்கட்டளை நிர்வாகி அறிவிப்பு வெளியிட்டார்.
தள்ளுபடி
இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை, உயர் நீதிமன்ற, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, 'ஆசிரியர்கள் இல்லாமல் கல்லுாரி செயல்பட முடியாது. கல்வி நடவடிக்கை முடங்கி விடும்; மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
'எனவே, உதவிப் பேராசிரியர் தேர்வு நடவடிக்கைகளுக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை' என்று உத்தரவு பிறப்பித்து, வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தகுதி பெற்ற 754 விண்ணப்பதாரர்களை நேர்முக தேர்வு செய்ய, சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கு உரிய தேதிகளை தெரிவித்தும், அப்பல்கலைகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்காததை எதிர்த்து, பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இரு நிபுணர்களை, பல்கலைகள் அனுப்பி வைக்க வேண்டும்; தேர்வு நடவடிக்கைகளை தொடர வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன், கல்லுாரி கல்வி இயக்குநரகம், உயர் கல்வி துறை மற்றும் சென்னை பல்கலை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு பிளீடர் டி.ரவிச்சந்தர், அண்ணாமலை பல்கலை சார்பில், வழக்கறிஞர் சித்திரை ஆனந்தம் ஆகியோர் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
'டிவிஷன் பெஞ்ச்' தீர்ப்பை மீறுவதற்காக, ஒருங்கிணைந்த முயற்சி நடந்து உள்ளது என்பது தெரிகிறது.
உத்தரவுக்கு மாறாக, அனைத்து அரசு அதிகாரி களும், துரதிருஷ்டவசமாக காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டிய தங்கள் கடமையை மறந்து, முழு செயல் முறையையும் முடக்கும் தீய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் என்றே தோன்றுகிறது.
அதாவது, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், 34 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கூறி, 126 பேரின் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தது, நீதிமன்ற அவமதிப்பு செயல்.
பரிந்துரை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லுாரி கல்வி இயக்குநர் குற்றவாளி என்று, இந்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதிக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கல்லுாரி கல்வி இயக்குநர், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை, ஜூன் 2ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது.
அதேபோல, பொது நல வழக்கில், டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.