கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் டாஸ்மாக் காலி மது பாட்டில்களை பெறுவதில் என்ன சிரமம்
கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் டாஸ்மாக் காலி மது பாட்டில்களை பெறுவதில் என்ன சிரமம்
UPDATED : ஜன 25, 2026 05:56 AM
ADDED : ஜன 25, 2026 12:28 AM

சென்னை: 'பண்டிகை காலங்களில், மது பாட்டில்கள் விற்பனை வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும், 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கு, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில் என்ன சிரமம்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களையும், மது பாட்டில்களையும் துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இதை தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் திட்டத்தை அமல்படுத்தும்படி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடியதாவது:
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், இதுவரை 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. மூன்று மாவட்டங்களில், பகுதி அளவுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மீதமுள்ள ஏழு மாவட்டங்களில், டாஸ்மாக் ஊழியர்களின் எதிர்ப்பால், சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டத்தை எதிர்க்கும் மாவட்டத்தில், டாஸ்மாக் ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
நீதிபதிகள் கூறியதாவது:
நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டு, காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம், மது பாட்டில்களில், 'கியூஆர் கோடு ஸ்டிக்கர்' ஒட்டுதல் போன்ற பணிகளை முழுமையாக அமல்படுத்த, தொடர்ந்து கால அவகாசம் கோருவது சரியல்ல.
உறுதி அளித்தபடி, இந்நேரம் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம், மாநிலம் முழுதும் அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேல் ஆகியும், மது பாட்டில்களில், 'கியூஆர் கோடு ஸ்டிக்கர்' ஒட்டும் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதற்கான டெண்டர் பணிகளும், இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
பண்டிகை காலங்களில், மது பாட்டில்கள் விற்பனை வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி உள்ளதாக, செய்தித்தாள்களில் தகவல் வெளியாகிறது. அவ்வாறு இருக்கும்போது, இந்த திட்டங்களை உடனே அமல்படுத்துவதில், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு என்ன சிரமம்?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அளித்த பதில்:
'டாஸ்மாக்' கடைகள் முழுதும் கணினிமயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, காலி மது பாட்டில்களைச் சேகரிக்கும் திட்டத்தை, மூன்றாம் தரப்பு முகமைகள் வாயிலாக செயல்படுத்த, டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமல்படுத்தப்படும்.
நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அனைத்து உத்தரவாதமும் முழுமையாக நிறைவேற்றப்படும். அடுத்த விசாரணையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, கடைசியாக அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்து வைத்தனர்.

