சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
UPDATED : ஆக 09, 2024 01:11 PM
ADDED : ஆக 09, 2024 10:58 AM

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டது.
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்த சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு இன்று (ஆக.,9) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தொடர்ந்து அவதூறு கருத்துகளை கூறி வந்ததால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தோம்,' என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்து வாதிட்ட சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர், 'சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை' எனத் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும், ''வேறு வழக்குகளில் தேவைப்படாவிட்டால் உடனடியாக சவுக்கு சங்கரை விடுதலை செய்ய வேண்டும். சவுக்கு சங்கரின் அவதூறு பேச்சுக்கு தண்டனை கொடுக்கலாமே தவிர, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முடியாது. அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது தவறு'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.